Monday 30 January 2017

கனா கண்ட காலம்

.

கனா கண்ட காலம்
.    ***************

நொருங்கிப்போன பழைய சாணித்தாளில்
மைப்பேனா கொண்டு
எப்பொழுதோ எழுதிய கவிதை ஒன்றைப்
படிப்பது போலிருக்கிறது,
பள்ளி நாட்களை இப்பொழுது
நினைத்துப் பார்க்கும்போது ..

அடிக்கைச் சதையின் மேல்பகுதியை
இழுத்து நசுக்கி
இரண்டு நாளுக்குக் கன்னிப்போய்
வலிக்க்கும்படிக் கிள்ளும்
கணக்கு வாத்தியார் காளிமுத்து,

கடவுளே இவர் சீக்கிரம் செத்துப் போகணும்னு
எங்களின் விபரம் தெரியாப் பருவத்து
வேண்டுதல்களைக் கடந்து,
இன்னமும் இருக்கிறாரோ, இல்லையோ ..

அவர் கரும்பலகையை இரண்டாய்ப்
பிரித்து, மாறி மாறி எழுதும் வேகத்துக்கு
ஈடு கொடுத்து எழுத மறுக்கும் 
பேனாவை உதறி உதறி
டெஸ்க் முழுக்க ஏற்படுத்திய மைக்கறைகள்
இப்பொழுதும் கூட அங்கங்கே
மங்கலாய்ப் படர்ந்திருக்கக் கூடும்..

அப்பொழுதே அடர்ந்து மீசை வளர்ந்த ஜெயராஜ்
தன் இடத்தில் காம்பஸ் முனையால் கீறி வரைந்த

நடுவில் அம்பு பாயும் இதயமும்,
அதன் கீழ் ஐ லவ் யு ----வாசகமும்
அடுத்தடுத்து வந்த மாணவர்களால்
அழிக்கப் பட்டிருக்கலாம்
அல்லது கோடிட்ட இடத்தில்
தங்களின் மனம் கவர்ந்த மாணவிகளின்
பெயர்களை இட்டு நிரப்பியும்
மகிழந்திருக்கலாம்...

வருங்காலத்தில் என்னவாகப் போகிறாய்..?”
என்ற ஹெச் எம் கேள்விக்கு
கவிஞனாகப் போகிறேன்என்று சொல்லி
மற்ற மாணவர்களின்
கேலிச்சிரிப்புக்கு ஆளாகும்,
என் போன்ற யாரோ ஒருவன்
இப்பொழுதும் கூட அந்த வகுப்பில்
இருக்க முடியும் ...

வேகமும் திசையும் கணிக்க முடியாத
வாழ்க்கைச் சூறாவளி
அவனையும் வேட்டையாடி,
மென்மையான கவிதை உணர்வுகளையெல்லாம்
களவாடிச் செல்லாது இருக்க வேண்டும் ...

சுய கழிவிரக்கத்தில் கண்களில் பனித்த
கண்ணீர் துளிகளில்,
நொருங்கிப்போன சாணித்தாள் கவிதையின்
மைப்பேனா எழுத்துக்கள்
மங்கலாகிக் கொண்டே வந்து
மெல்ல மறைந்தும் போயின..!


                        ********

No comments:

Post a Comment